பெங்களூருவிலுள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கண்மருத்துவ பிரிவில் பணியாற்றி வருபவர் அப்துர் ரகுமான். இவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம்(Islamic State Khorasan Province (ISKP) என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்.
மேலும், ஐ.எஸ் அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் விதத்தில் ஆப் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுட்டிருந்தார்.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் பசவன்குடியில் உள்ள அவரின் வீட்டில் நேற்று அப்துர் ரகுமானை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு அப்துர் ரகுமான் சிரியாவுக்கு சென்றுள்ளார். அப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் மருத்துவ முகாமுக்கும் சென்று 10 நாள்களாக அங்கேயே தங்கியிருந்து காயமடைந்த பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்கு பிறகுதான், பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்
அப்துர் ரகுமான் கைதை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 3 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி லேப் டாப் , செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
கடந்த மார்ச் மாதத்தில் ஐ.எஸ்.கே.பி அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமி வானி அவரின் மனைவி ஹினா பஷீர் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சமி வானியுடன் அப்துர் ரகுமான் தொடர்பிலிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதுபோல் , திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி அப்துல்லா பஷீத்துடனும் அப்துர் ரகுமான் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தோடர்பாக எம்.எஸ். ராமையா மருத்துவமனை கல்லூரி சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ”கடந்த 201- ம் ஆண்டு பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.ஸ் படித்தார். தொடர்ந்து அரசு கோட்டாவில் எங்கள் கல்லூரியில் எம்.எஸ் படித்தார். ஜூலை 20- ந் தேதி எம்.எஸ். படிப்பையும் முடிந்தார். கல்லூரி வளாகத்துக்கு வெளியே அவருக்குள்ள தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியாது” என கூறியுள்ளது.