இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த திங்கட்கிழமை மட்டும் 19 ஆயிரத்து 622 ஆக தொற்று குறைந்திருந்தது. ஆனால் அடுத்த நாளே 30 ஆயிரத்து 203 பேர் கொரோனாவுக்கு ஆளாகினர்.
இதற்கிடையே தொடர்ந்து 3-வது நாளாக தொற்று 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளாவில் இன்று ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 307 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32 ஆயிரத்து 097 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு 188 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 21,634 பேர் கொரோனாவில் இருந்து மீண்டர். 2 லட்சத்து 40 ஆயிரத்து 186 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று பகல் நேர ஊரடங்கு அமல் படுத்தியும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.