இலங்கை தலைநகர் கொழும்பு அருகே சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை கொழும்பு அருகே உள்ள மஹரா என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் 175 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை தனி அறைக்கு மாற்றக்கோரி மற்ற கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சிலர், சிறைச்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் இன்று சிறைமுன் கூடினர் இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மஹரா சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவலில் வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் நிலை என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள பலர் சிறைச்சாலைக்கு அருகில் கூடியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இதனால் சிறை காவலர்களுக்கும் அங்கு கூடியுள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த ஞாயிறன்று பிற்பகல் துவங்கிய கலவரம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.