சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கோவிட்19 என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது’ என, பிரிட்டன் உளவு அமைப்புகள் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வூஹான் ஆய்வகத்தில் 2019, நவம்பரில் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து, ‘கோவிட் தொற்றின் தோற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். ஆனால், ‘வூஹானில் தான் கோவிட் தோன்றியது’ என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், ‘சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கோவிட்19 என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது’ என, பிரிட்டன் உளவு அமைப்புகள் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, பிரிட்டன் தடுப்பூசிகள் துறை அமைச்சர் ஷகாவி கூறுகையில், ‘கோவிட் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பால் முழுமையாக விசாரிக்க முடியும். பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது. அப்போதுதான் கோவிட் தொற்றின் ஆரம்ப பரவல் குறித்து நன்கு புரிந்துகொள்ள முடியும்’ என்றார்.