மானஸ்தன் – எஸ்.வி.சேகர் நினைவு கட்டுரை

SHARE

ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் நினைவு பதிவு

2006-11 காலகட்டத்தில் எஸ்.வி.சேகர் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.

அ.தி.மு.க சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். ஆனால், போயஸ் கார்டன் அரசியல், என்னவென்று அப்போதுவரை அவருக்குத் தெரியாது; புரியாது. உள்ளே போன பிறகுதான் அதைத் தெரிந்து கொண்டார்.

‘பழக்கவழக்கமெல்லாம் கட்சியில் ஒரு சீட்! அவ்வளவுதான். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதைத்தாண்டி அக்ரஹாரத்துக்கு அ.தி.மு.க-வில் இடமில்லை; போயஸ் கார்டனுக்குள் வாய்ப்பே இல்லை’ என்பதை ஜெயலலிதாவை முன்னே நிறுத்தி, சசிகலா-நடராசன் பின்னால் இருந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருந்தனர். அதை வலம்புரிஜான் பல ஆண்டுகளுக்கு முன், நக்கீரனில் எழுதிய, ‘கல்லறைகள் பிளக்கும்… நாற்காலிகள் நடுங்கும்…’ என்ற தொடரில் விரிவாகப் பதிவு செய்திருப்பார்.

சசிகலா-நடராசன் ஆடிய அந்த ஆட்டத்தில், அக்ரஹாரத்து இமயங்களே நொறுங்கிய காலகட்டம் அது. எஸ்.வி.சேகர் எம்மாத்திரம்! அ.தி.மு.க எம்.எல்.ஏ என கெத்தாக வலம் வந்த சில காலத்திலேயே அவர் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதை “அம்மா… அம்மம்மா…” என்ற பெயரில் எஸ்.வி.சேகர் நக்கீரனில் எழுதிய தொடரில் வரிக்கு வரி விரிவாக ஒப்புக்கொண்டு புலம்பித்தள்ளி இருப்பார். அதுபோகட்டும்!

சில காலத்திலேயே அ.தி.மு.க-வில் இருந்து விலக்கப்பட்ட எஸ்.வி.சேகர், எம்.எல்.ஏ-வாகவே தொடர்ந்தார்(அதற்கு அவருக்கு சட்டப்படியான முழு உரிமை இருக்கிறது; தார்மிக நியாயங்களை நாம் பேசத் தேவையில்லை). அப்போது அதிகாரத்தில் இருந்த தி.மு.க-விலும் எஸ்.வி.சேகர் இணையவில்லை. அப்படி இணைந்தால், கட்சித் தாவல் சட்டப்படி, எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும் என்பதால், அதை கவனமாகத் தவிர்த்துவிட்டார். ஆனால், தி.மு.க-வில் அவர் சேரவில்லையே தவிர, தி.மு.க எம்.எல்.ஏ-வாகவே வலம் வந்தார். தி.மு.க ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ள படுபிரயத்தனங்களைச் செய்தார்.

எந்தளவிற்கு இறங்கிப்போனார் என்றால், ஒரு நாள் பெரிய கேக் டப்பாவை தூக்கிக் கொண்டு பத்திரிகையாளர் அறைக்கு வந்தார் எஸ்.வி.சேகர். ”என்ன சார் தி.மு.க-வுல சேரப் போறீங்களா?” என அங்கிருந்த சில பத்திரிகையாளர்கள் அவரைக் கலாய்த்தபோது, “இல்லை… இன்னைக்கு தளபதிக்கு பிறந்தநாள்(வார்த்தையைக் கவனியுங்கள்… தளபதிக்குப் பிறந்தநாள்…) அவருக்கு இந்த கேக்க ஊட்டப்போறேன். எல்லாரும் வந்து அத போட்டோ எடுங்க” என்றார். அவர் சொன்னபடியே செய்தார். அதோடு சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க பொதுக்குழுவில் கலந்து கொண்டார். தமிழகத்தில் பிராமணர்களை மதிக்கும் கட்சி தி.மு.கதான் என பேட்டியும் கொடுத்தார் எஸ்.வி.சேகர்.

அப்போதும், பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், கொள்கைகள் எல்லாம் எஸ்.வி.சேகருக்குத் தெரியும். ஆனால், அவையெல்லாம் தனக்குத் தெரியும் என்றுகூட அல்ல… அவற்றையெல்லாம் தான் கேள்விப்பட்டிருப்பதாகக்கூட எங்கேயும் அவர் காட்டிக்கொண்டதில்லை.

2014-ல் மோடி பிரதமராக வென்றபிறகே, எஸ்.வி.சேகர் அன்டு கோ-வின் நடவடிக்கைகள் மொத்தமாக மாறின. இதுவே சாஸ்வதமும் கிடையாது. நாளை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறும்போது, காட்சிகள் மாறும்போது, எஸ்.வி.சேகரும் உடனே மாறிக் கொள்வார். கேக் டப்பாவை தூக்கிக்கொண்டு வந்து, ‘தளபதிக்கு கேக் ஊட்டப்போறேன்… இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமிக்கு ஊட்டப்போறேன்’ என அசடு வழியாமல், இயல்பாக சொல்வார். அவரால் அப்படிச் சொல்ல முடியும்.

ஆனால், இதில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அ.தி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகர், தி.மு.க பொதுக்குழுவில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகர், பிராமணர்களை மதிக்கும் கட்சி தி.மு.க என்று சொன்ன எஸ்.வி.சேகர், தளபதிக்கு கேக் ஊட்டப்போகிறேன் என்றுசொல்லிக் கொண்டு கேக் டப்பாவைத் தூக்கிக் கொண்டு திரிந்த எஸ்.வி.சேகரெல்லாம், நிஜ எஸ்.வி.சேகர் இல்லை.

மோடியின் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழ் பாதுகாப்பாக இருந்துகொண்டு, விஷத்தையும், வன்மத்தையும் கக்குகிறாரே… இந்த எஸ்.வி.சேகர்தான் நிஜமான எஸ்.வி.சேகர். இதுதான் அவரின் இயல்பு; சுபாவம். இப்போது அவர் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் சித்தாந்தம்தான், அவருடைய நிஜமான அரசியல் சித்தாந்தம்.

அதனால், அவர் தொடர்பான பைல்களை தி.மு.க, அ.தி.மு.க என திராவிடக் கட்சிகள் எதுவாக இருந்தாலும், பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இதுவரை இல்லையென்றால், அதுபோன்ற பைல்களை புதிதாக உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் நிலைமை மாறும்போது, அவர் கேக் டப்பாவைத் தூக்கிக்கொண்டு வரும்போது, அந்த பைல்களை அவருக்கு நினைவுபடுத்தி, அவருக்கான இடம் எது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இது எஸ்.வி.சேகருக்கு மட்டுமில்லை… ஒட்டுமொத்த எஸ்.வி.சேகர் அன்ட் கோ-விற்கும்தான்….


SHARE

Related posts

Leave a Comment