எல்லைப் பிரச்சனை இருந்தாலும், இந்தியா குறித்த எங்களுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – ஜெய்சங்கர் பேச்சுக்கு சீனா பதில்

SHARE

 ”ஒப்பந்தங்களை சீனா மீறியதே, எல்லைப் பிரச்னைக்கு காரணம்,” என, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆன்லைன்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.. இதற்கு, ‘இரு தரப்பு உறவு மேம்பட, இரண்டு தரப்புமே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என, சீனா தெரிவித்துள்ளது..

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிர மடைந்துள்ளது. ஏழு மாதங்களுக்கு மேலாக, எல்லையில், இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை திரும்பப் பெறுவதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியில், பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
எல்லையில் படைகளை குவித்துள்ளதற்கு, ஐந்து வெவ்வேறு காரணங்களை சீனா கூறியுள்ளது. இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளதே, இரு தரப்பு உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இந்திய அமைச்சரின் கருத்துக்கு, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் பதிலளித்துள்ளார். சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள். உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் சந்தையை உடையவை. நல்ல உறவுடன் இருப்பதே, இரு நாட்டு மக்களின் விருப்பம். எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையில் இருந்து, இந்திய தரப்பு, தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது உறுதியாகிறது. இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா எப்போதும் முழுமையாக கடைப்பிடித்து வருகிறது. எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் சீனா உறுதியாக உள்ளது.


எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதே நேரத்தில், எங்கள் எல்லையை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட, இரு தரப்பும் தங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளைப் போலவே, எங்கள் எல்லையைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என, இந்தியா தன்னைத்தானே கேள்வி கேட்க வேண்டும்.எல்லைப் பிரச்னை இருந்தாலும், இந்தியா குறித்த எங்களுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment