திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி, 45, என்பவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவின் வயநாட்டின் பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி, துபாயில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம், ‘கூகுல் பே’ மூலம் பணம் அனுப்பி ‘ஓணம் பம்பர்’ லாட்டரி ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார். நண்பரும், கடையில் இருந்த கடைசி சில டிக்கெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சைதல்வியின் வாட்ஸ் ஆப்பிற்கு அதை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று அந்த லாட்டரி சீட்டின் முடிவு வெளியானது. அதில், சைதல்விக்கு முதல் பரிசான, ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. இதையறிந்த சைதல்வி, துபாயிலிருந்து கிளம்பி சொந்த ஊர் வந்தார். தன் நண்பரிடம் டிக்கெட்டைப் பெற்று அதை வாங்கியில் டெப்பாசிட் செய்தார். ரூ.12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ.7.56 கோடி கிடைக்கும்.
சமையல் பாத்திரங்களைக் கழுவி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த தொழிலாளிக்கு கிடைத்த இந்த பெரிய பரிசுச் செய்தி, கேரளத்தில் வைரலாகி வருகிறது.