பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பு மருந்தின் செயல்திறனை பாதிக்காது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் வைரஸ் மேலும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் எதிர்காலத்தில் தடுப்பூசியிலும் நாம் மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை உள்ளது’ என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பர் 21ல் கண்டறியப்பட்டது. இந்த புதிய வைரசை ‘வியூஐ 20201201’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
அடுத்தடுத்த மாதங்களில் இந்த வகை வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்ததை அடுத்து பிரிட்டனின் பாதிப்பு பன்மடங்காக உயர்ந்தது. முந்தைய பரவலை விட இந்த புதிய வகை வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.இதையடுத்து தெற்கு பிரிட்டன் மற்றும் லண்டனில் இம்மாத இறுதி வரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுக்கான பயணியர் விமான சேவையை ரத்து செய்துள்ளன.
தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பு மருந்துகள் இந்த புதிய வகை வைரசிடம் இருந்து காக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் தீபக் செஹல் ,வைரஸ்களில் காணப்படும் ‘ஸ்பைக் புரோட்டீன்’ எனப்படும் புரதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தான் மனித செல்களில் புகுந்து தொற்றை உண்டாக்குகிறது.இந்த புதிய வகை தொற்றிலிருக்கும் ‘ஸ்பைக்’ புரதம் 13 உருமாற்றங்களை அடைந்துள்ளன. அறிவியல் ரீதியாக இதை ‘என்501ஒய்’ மாற்றம் என அழைக்கிறோம்.இந்த புதிய வகை வைரஸ் தொற்று தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பு மருந்துகளின் செயல் திறனை நிச்சயம் பாதிக்காது. நாளடைவில் இந்த வைரஸ் பல்வேறு முறை உருமாற்றம் அடையும் போது அதற்கு தகுந்தாற் போல தடுப்பு மருந்திலும் நாம் மாற்றங்கள் செய்ய வேண்டி நிலை ஏற்படும்.
‘சீசனல் ப்ளூ’ எனப்படும் ஆண்டுதோறும் ஏற்படும் வைரஸ் தொற்றுகளுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் கூட அதன் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றப்படுவது இயல்பு தான்.’சீசனல் ப்ளூ’ அளவுக்கு கொரோனா தொற்று அவ்வளவு விரைவாக உருமாற்றம் அடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
‘இந்த புதிய உருமாற்றத்தினால் மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ் செல்களில் மிக வேகமாக புகும் என்றும் இதன் காரணமாகவே தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளது’ என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் இந்த மாற்றம் பாதிப்பின் தீவிரத்தை அதிகப்படுத்துமா என்பதற்கு அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை .இதற்கிடையே கொரோனா வைரசின் ‘ஸ்பைக்’ புரதத்தின் ‘என்501ஒய்’ உருமாற்றத்தை எலியின் செல்களில் செலுத்தி ஆய்வு செய்து பார்த்ததில் வைரசினால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்ததாக ஆய்
வாளர்கள் தெரிவித்தனர்.