சங்கு சத்தம் கேட்காமல் காப்பாற்றிய சாம்சங்

SHARE

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50), விவசாயி. அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு தாமரைச்செல்வி (46) என்ற மனைவியும், குணசேகரன் (21), ஞானசேகரன் (18) என்ற மகன்களும் உள்ளனர். மகன்கள் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். வேலாயுதம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் போட்டியிட்டார். அப்போது இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலாயுதம் தனது மோட்டார்சைக்கிளில் திம்மாம்பேட்டைக்குச் சென்று விட்டு, வரும் வழியில் கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வாங்கி கொண்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைய முயன்றார். அந்த நேரத்தில் வீட்டுக்கு அருகில் இருள்சூழ்ந்த பகுதியில் பதுங்கியிருந்த மர்மநபர் அவரை நோக்கி திடீரென நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பிப் பார்த்தார்.

அப்போது அவரின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் தலா ஒரு குண்டு பாய்ந்திருந்தது. மார்பை நோக்கி சீறிப்பாய்ந்த இரு குண்டுகள் அவருடைய சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனில் பட்டதால், ஊடுருவி துளைத்து மார்பு பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட மர்மநபரும், அவருக்கு துணையாக வந்த மற்றொருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் துளைத்ததால் காயம் அடைந்த வேலாயுதம் முதலில் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியில் தி.மு.க. கிளை செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment