ஆப்கானில் போர் முடிந்தது தலீபான்கள் அறிவிப்பு

SHARE

அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களையும், அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளையும் தலீபான்கள் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களின் தலைநகரங்களை தலீபான்கள் தங்கள் வசம் ஆக்கினார்.
 நேற்று தலீபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். எனினும் படை பலத்தை பயன்படுத்தி காபூலை கைப்பற்ற விரும்பவில்லை என தெரிவித்த தலீபான்கள் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறினர்.
அதன்பின்னர் காபூல் நகரம் தங்கள் வசமானதை தொடர்ந்து, வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி போராளிகளுக்கு தலீபான் அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. ஆப்கான் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான வினியோகம் நிறுத்தப்படாது என்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது‌.
அதேபோல் வெளிநாட்டவர்கள் விரும்பினால் காபூலை விட்டு வெளியேறலாம் அல்லது அவர்கள் தொடர்ந்து காபூலில் இருக்க வேண்டுமெனில் தங்களை தலீபான் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தலீபான்கள் அறிவித்தனர்.
எனினும் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஆட்சி மாற்றம் தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கும் இடையே அதிபர் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியதாக தகவல் வெளியானது.
தலீபான்கள் காபூலை நெருங்கும்போதே அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும்  துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கத்தில்போரில் மக்களின் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன். 20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன். மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலீபான்கள்தான் பொறுப்பு” என கூறி உள்ளார்.
இதனிடையே அமெரிக்காவில் ஆப்கானில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி மாளிகை முன் ஜோ பைடனுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். முன்னாள் வெளியுறவு மந்திரி அலி அகமது தலைமையில் 6 மாதங்களுக்கு இடைக்கால அரசை அமைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தலீபானின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் கூறும் போது, தனித்தனியாக வாழ விரும்பவில்லை ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தின் அமைப்பது குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும்.கடவுளுக்கு நன்றி, நாட்டில் போர் முடிந்துவிட்டது. நாங்கள் தேடியதை நாங்கள் அடைந்து விட்டோம். இது நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் நமது மக்களின் சுதந்திரம். யாரையும் குறிவைத்து எங்கள் நிலங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்கிறது.


SHARE

Related posts

Leave a Comment