அமெரிக்க விமானத்தில் பதுங்கி இருந்த 640 ஆப்கானிஸ்தானியர்கள் விமானிகள் அதிர்ச்சி.

SHARE

‘ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
மேலும், ஆப்கானிஸ்தானில் வசித்துவரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளையும் தீவிரப்படுத்தின. இதனால் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் காலை முதலே பரபரப்பானது. அமெரிக்கா, காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பதற்காக கூடுதலாக 5,000 படைவீரர்களை அனுப்பி வைத்தது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டினர் காபூல் விமான நிலையத்தில் திரண்ட நிலையில், தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்துக்குள் நுழைந்ததால் விமான நிலையம் திக்குமுக்காடியது‌. அதுதொடர்பாக வெளியான சில வீடியோ காட்சிகள் பார்க்கும்போதே பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. பஸ் படிக்கட்டுகளில் முண்டியடித்து ஏறுவதுபோல விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முயற்சிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதற்கிடையில் அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று ஒடுதளத்தில் இருந்து புறப்பட்டதும் மக்கள் சிலர் விமானத்தின் சக்கரங்களையொட்டிய பகுதியில் தொற்றி கொண்டனர்.
பின்னர் விமானம் வானில் பறக்கும்போது அதில் தொங்கி சென்ற 3 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்து பலியாகினர்.
இதனிடையே விமான நிலையத்தை ஆக்கிரமித்த மக்கள் ஓடு பாதைகளிலும் கூட்டம் கூட்டமாக திரண்டு நிற்பதால் விமானம் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இதனால் காபூல் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியர்கள் உள்பட மற்ற நாட்டவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்து அலை அலையாக அங்கு திரண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தின் நுழைவாயில்கள் அடைக்கப்பட்ட நிலையில் மக்கள் சுற்றுச்சுவர்களில் ஏறி குதித்து விமான நிலையத்துக்குள் செல்கின்றனர்.
இதனிடையே விமான நிலையத்தில் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் 5 பேர் பலியானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற ராணுவ விமானம் ஒன்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூலில் இருந்து கத்தார் செல்லும் அமெரிக்க விமானப்படை காலி விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் ஏறி அதில் பதுங்கி இருந்தனர். 640 பேருடன் நிரம்பிய அமெரிக்க விமானப்படை விமானத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

அமெரிக்க விமானப்படை சி -17 குளோப்மாஸ்டர்-3 ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காபூலில் இருந்து சுமார் 640 ஆப்கானிஸ்தானியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவித்து உள்ளனர்.
இந்த விமானம் குறைந்த  ஆட்களை ஏற்றி செல்லும் விமானம் ஆகும். விமானிகள் அதிகம் பேரை  ஏற்றிச் செல்ல முதலில் விரும்பவில்லை. இருப்பினும், பீதியடைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரே விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.அதில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தனர். அவர்கள் இறங்க மறுத்தனர். அதனால் அவர்களை இறங்கச் சொல்வதற்குப் பதிலாக, விமானப்படை விமானிகள் கத்தாருக்கு புறப்பட்டு சென்றனர்.


SHARE

Related posts

Leave a Comment