சோதனை முயற்சியாக ஆக்சிஜனை நிறுத்தியதால் 22 பேர் பலி -அதிர்ச்சி வீடியோ!

SHARE

உத்தர பிரதேசத்தில் கடந்த ஏப்ரலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில், சோதனை முயற்சியாக, ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதில், 22 பேர் பலியானதாக தனியார் மருத்துவமனை உரிமையாளர் பேசும், ‘வீடியோ’ அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் ஆக்ராவில், பராஸ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஏப்ரலில், கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில், பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரின்ஜய் ஜெயின், மற்றொரு ஊழியருடன் பேசும் நான்கு, ‘வீடியோ’ சமீபத்தில் வெளியானது.

இதில், ஊழியரின் முகம் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிமையாளரின் குரல் மட்டுமே கேட்கிறது. இந்த வீடியோ, ஏப்., 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அரின்ஜய் ஜெயின் பேசி உள்ளதாவது:மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை சுத்தமாக இல்லை என, முதல்வர் கூறியுள்ளார். மோடி நகர் பகுதியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.


இது பற்றி நோயாளிகளின் குடும்பத்தினரிடம் கூறியபோது, சிலர் ஏற்றுக் கொண்டு, வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டனர்; பலர் செல்ல மறுக்கின்றனர்.எனவே ஆக்சிஜன் சப்ளை நின்றால், தற்போதுள்ள நோயாளிகளில் எத்தனை பேர் உயிர் பிழைப்பர் என்பதை அறிய, ஒரு சோதனை ஓட்டத்தை செய்து பார்த்தோம். ஆக்சிஜனை நிறுத்திய ஐந்து நிமிடங்களில், 22 நோயாளிகள் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் பேசுகிறார்.

இந்த வீடியோ எடுக்கப்பட்ட போது, பராஸ் மருத்துவமனையில், 96 கொரோனா நோயாளிகள் இருந்ததாகவும், அதில், 22 பேர் இறந்து, 74 பேர் உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டை, பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரின்ஜய் ஜெயின் மறுத்துள்ளார். ”அந்த வீடியோ, துண்டு துண்டாக வெட்டி ஒட்டப்பட்டுள்ளது,” என, தெரிவித்தார்.


இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு நாராயண் சிங் கூறியதாவது: அரசு ஆவணங்களின்படி ஏப்., 26 அன்று, பராஸ் மருத்துவமனையில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எனவே, அந்த வீடியோவின் உண்மை தன்மை மீது சந்தேகம் உள்ளது. ஆனாலும் இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment