இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: துவக்கி வைத்தார் மோடி

SHARE

தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிபடுத்தும் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், ‘ஆஸ்ட்ராஜெனகா’ நிறுவனம் இணைந்து, ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிரா மாநில புனேயை சேர்ந்த, ‘சீரம்’ இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ‘கோவாக்சின்’ எனப்படும் தடுப்பூசியை, உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அவசரகாலத்திற்கு பயன்படுத்த, மத்திய அரசு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்கியது.

உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், டாக்டர்களுக்கு பாராட்டு.தடுப்பூசி மருந்துக்காக அனைத்து விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் 2 தடுப்பூசி கிடைத்துள்ளது. உலகம் முழுதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது.

தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல.நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும். முதல் கட்டமாக அடுத்த 2-3 மாதங்களில் 3 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.


தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடர்கிறது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம். ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு டோஸ்களை செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய தடுப்பூசி விலை குறைவு.முதல் டோஸ் போட்டவுடன், மாஸ்க்குகளை கைவிடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தொடர வேண்டும். இரண்டாவது டோஸ் போட்ட உடன் தான் எதிர்ப்பாற்றல் நமது உடலில் உருவாகும்.கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும். மற்ற தடுப்பூசிகளை காட்டிலும், இந்திய தடுப்பூசிகளை பாதுகாப்பது எளிது. இவ்வாறு அவர் பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment