இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்.

SHARE

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் பொங்கல் திருநாள் முடிந்த பிறகு, பணியிடங்களுக்கு மீண்டும் செல்வதற்கு வசதியாக பிற மாவட்டங்களில் இருந்து வருகிற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பேருந்துகளின் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) பஸ்நிலையத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பஸ்நிலையத்தில் ஒரு மையமும் என 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com www.busindia.com போன்ற இணையதளம் மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

எங்கிருந்து எந்த பேருந்து புறப்படும்


* மாதவரம் புதிய பேருந்துநிலையம் : செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.
* கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் : ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
* தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் : திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
* தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம் : திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
* பூந்தமல்லி பேருந்து நிலையம் : வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.
* கோயம்பேடு பேருந்து நிலையம் : மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகளும், பொங்கல் பண்டிகைக்கு பின்பு 9 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகளும் என 19,191 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment