சுவிட்சர்லாந்தை சேர்ந்த, ஐ.கியு., ஏர் என்ற நிறுவனம், 2019 – 20ம் ஆண்டில், உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில், 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன. இதில், 22 நகரங்கள், இந்தியாவில் உள்ளன.
உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக, சீனாவின் ஸின்ஜியாங் நகரம் உள்ளது. இதற்கு அடுத்த, ஒன்பது இடங்களை, இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், புலந்த்ஷர், பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேடடர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டில்லி ஆகியவை பிடித்துள்ளன.
இதைத்தவிர, உ.பி.,யில், மீரட், ஆக்ரா, முசாபர்நகர், ஹரியானா மாநிலத்தில், பரீதாபாத், ஜிண்ட், ஹிசார், பதேஹாபாத், பந்த்வாரி, குர்கான், யமுனாநகர், ரோத்தக், தருஹீரா ஆகிய நகரங்களும், பீஹாரில் முசாபர்பூரும் அதிக மாசடைந்த நகரங்களாக உள்ளன.
டில்லி காற்றின் தரம், 2019 – 20ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்திருந்தாலும், சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த தலைநகர்களில், அது முதலிடத்தில் உள்ளது. போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானங்கள், கழிவுகள் எரிப்பு, விவசாய கழிவுகள் எரிப்பு உட்பட, பல காரணங்களால், இந்தியாவில் காற்று மாசு அதிகரிக்கிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.