ஓய்வு பெற்றவுடன் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன வேலையில் சேரக்கூடாது – ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் புதிய உத்தரவு

SHARE

அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஒரு உத்தரவை அனுப்பி உள்ளது. அதில்,
அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடனே சில அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் முழு நேர பணியிலோ அல்லது ஒப்பந்த முறை பணியிலோ சேருகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு தனியார் வேலையில் சேருவதற்கு ஒவ்வொரு அரசுத்துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயித்துள்ளன.

அந்த கால இடைவெளியை பின்பற்றாமல், உடனடியாக தனியார் வேலையில் சேருவது தவறான நடத்தை ஆகும். எனவே, ஓய்வு பெற்ற பிறகு தனியார் பணியில் சேருவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியை கட்டாயமாக பின்பற்றுவதை உறுதி செய்யும்வகையில் அனைத்து அரசுத்துறைகளும் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
அப்படி தனியார் பணியில் சேருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். அந்த சான்றிதழ் இருந்தால்தான், அவரை பணியில் சேர்க்க பரிசீலிக்க வேண்டும். காத்திருப்பு நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி தனியார் வேலையில் சேர அனுமதி பெற வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி, உடனடியாக தனியார் பணியில் சேரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விதிமுறையில் உட்பிரிவை சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பணி வழங்கும் நடைமுறை ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. ஆனால்,அரச உயப்தவியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஆளும் கட்சியில் சேர்ந்து பதவி பெருவது குறித்து இந்த கண்காணிப்பு ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.


SHARE

Related posts

Leave a Comment