‘கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வு இல்லை’ – மு.க.ஸ்டாலின் பேச்சு

SHARE

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையானது நமது மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்பதை அறிவோம். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராது இப்பணியில் முழு முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு. எனினும் ஊரடங்கு என்பது ஒரு தீர்வு அல்ல. ஏனென்றால், அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதித்துவிடும். எனவேதான், தொடர் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வினியோகிப்பாளர்கள், ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதித்துள்ளோம்.
இத்தகைய நிறுவனங்கள் எவ்வித சிரமமின்றி இயங்க ஏதுவாக அவற்றின் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு சென்றுவர ‘இ-பதிவு’ முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மைய சேவையும் தொழில் வழிகாட்டி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்பதை அறிந்து மகிழ்கிறேன்.
தொழிற்சாலைகளை இயக்கும் அதே நேரத்தில், உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதும் மிகவும் முக்கியமான கடமையாகும் என்று தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் கொரோனா பெருந்தொற்றானது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்கி உள்ளது. இருப்பினும், நம் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் அனைத்து முன்கள பணியாளர்களும் இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு தற்போது நாளொன்றுக்கு 519 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பு அளவை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மூன்று ஆக்சிஜன் நிலையங்கள் மூலம் 15 டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ‘சிப்காட்’ மூலம் சுமார் 7,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன.
‘சிப்காட்’ நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் 1,650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் ‘சி.ஐ.ஐ.’ மற்றும் ‘சாம்சாங்’ போன்ற நிறுவனங்கள் மூலமாக சுமார் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இம்மாநிலத்தின் தொழில் நிறுவனங்களின் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அமைப்பு 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது. தமிழ்நாடு அரசு தற்போது இப்பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
‘சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள் கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டெழ, நீங்கள் அனைவரும் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசின் முயற்சிகளில் உங்களுக்கு ஏதுவான ஒன்றினை நீங்கள் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் பங்களிப்பை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களது சி.எஸ்.ஆர். முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்வது சிறப்பாக இருக்குமென்றும் கருதுகிறேன். குறிப்பாக, ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் ப்ளோமீட்டர்கள், கிரையோஜெனிக் டேங்கர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள்.
இதைத் தவிர, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும், தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க கேட்டுக்கொள்கிறேன். தற்போது இந்த நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பல உயிர்களைக் காக்கவும், இந்த நோயிலிருந்து நமது மக்களை மீட்கவும் பேருதவியாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி, உங்கள் பங்களிப்புக்கு முன்னதாகவே நன்றி கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொழில் நிறுவன பிரதிநிதிகள் கூட்டத்தில் ‘இந்தியா சிமெண்ட்ஸ்’ நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உங்கள் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) தலைமையிலான தமிழக அரசின் சிறப்பான பணிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை முன்னெடுக்க அதிகாரிகள், தொழில் துறையை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
முதல்-அமைச்சரின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு சிமெண்ட் ஆலை நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அளிக்க தயாராக இருக்கிறது. சிமெண்ட் ஆலைகளில் உள்ள சுகாதார மையங்களை கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான இடங்கள் மற்றும் ஊழியர்களை வழங்கி உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment