கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ஊழல் – ஆதாரங்களை வெளியிட்டார் சித்தராமையா

SHARE

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோர் கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடந்திருப்பதாக கடந்த 3-ந் தேதி நான் குற்றச்சாட்டு கூறி இருந்தேன். கொரோனா உபகரணங்கள் வாங்கியது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி 20-க்கும் மேற்பட்ட முறை தலைமை செயலாளர், பிற அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தேன். நான் எழுதிய கடிதத்திற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. 17 நாட்கள் கழித்து நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று கூறி ஸ்ரீராமுலுவும், அஸ்வத் நாராயணும் விளக்கம் அளித்திருந்தனர். கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரூ.4,167 கோடியை கொரோனா உபகரணங்கள் வாங்குவதற்காக அரசு செலவு செய்துள்ளது.

அதாவது சுகாதாரத்துறையில் ரூ.750 கோடியும், பெங்களூரு மாநகராட்சி ரூ.200 கோடியும், தொழிலாளர் நலத்துறை ரூ.1000 கோடியும், மருத்துவ கல்வித்துறை ரூ.815 கோடியும், மொத்த மாவட்ட கலெக்டர்கள் ரூ.740 கோடியும், போலீஸ் மற்றும் பெண்கள் நலத்துறை ரூ.500 கோடியும் செலவு செய்திருக்கிறது. ஏறக்குறைய கொரோனா உபகரணங்கள், அது சம்பந்தமாக ரூ.4.167 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் முறைகேடு நடந்திருக்கிறது.

அனைத்து உபகரணங்களையும் தற்போது மார்க்கெட்டில் உள்ள விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் வென்டிலேட்டர் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சம் வரைக்கும் வென்டிலேட்டர்கள் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தெர்மல் ஸ்கேனர் நல்ல தரமானது கூட தற்போது ரூ.2 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. கர்நாடக அரசு அதனை ரூ.5 ஆயிரத்திற்கு மேல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கொரோனா கவச உடைகள் தற்போது ரூ.330-க்கு விற்கப்படுகிறது. நமது அதிகாரிகள் ரூ.2 ஆயிரத்து 112 கொடுத்து வாங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 5 லட்சம் கொரோனா உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளது. அவற்றில் 1 லட்சம் உபகரணங்கள் தரமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நமது ராணுவ வீரர்களை கொன்று குவித்த சீனாவில் இருந்து கூட கொரோனா உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மட்டும் குறைந்த விலைக்கு கிடைக்கும் கொரோனா உபகரணங்கள் கர்நாடகத்தில் மட்டும் 2 மடங்கு, 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன?.

கொரோனாவால் மக்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். மக்கள் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த முறைகேடு குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடைபெற வேண்டும். தவறு செய்தவர்கள் மந்திரிகள், அதிகாரிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

கொரோனா சந்தர்ப்பத்தில் அரசுடன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுவரை கைகோர்த்து தான் செயல்பட்டு வந்தது. இனியும் கொரோனா விவகாரத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் முறைகேட்டை சகித்து கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.SHARE

Related posts

Leave a Comment