எகிப்தின், ‘சூயஸ்’ கால்வாயின் கரையில் மோதிய சரக்கு கப்பலால், அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், சர்வதேச வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில், மத்திய தரைக்கடல் பகுதியையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869ம் ஆண்டு, கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இந்த கால்வாய், 163 கி.மீ., நீளமும், 300 மீட்டர் அகலமும் உடையது.
கடந்த, 23ம் தேதி அதிகாலை சீனாவிலிருந்து புறப்பட் ‘எவர் கிவ்வன்’ என்ற சரக்கு கப்பல், ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு, இந்த கால்வாய் வழியாக பயணித்தது.
அப்போது பலத்த காற்று வீசவே, மாலுமியின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாய்க்கு குறுக்கே, கரையில் மோதி நின்றது. 400 மீட்டர் நீளமான இந்த கப்பல், கால்வாயின் நடுவில் சிக்கி இருப்பதால், அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கப்பலை, அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில், மீட்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய், ஆசிய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தை மிகவும் சுலபமாக்கியது. ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தில், 12 சதவீத வர்த்தகம், இந்த கால்வாய் வாயிலாகவே நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், இந்த கால்வாய் வழியாக, 19 ஆயிரம் கப்பல்கள் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.