சென்னை-சேலம் இடையிலான 8 வழி சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.