டீசல் விலை உயர்வை கண்டித்து மார்ச் 15-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

SHARE

டீசல் விலை உயர்வை கண்டித்து அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் பாமர மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழத்தை விட 18 மாநிலங்களில் டீசல் விலை ரூ.5 குறைவாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் டீசலுக்கான விலை வாட் வரியை குறைக்கவில்லை.

தினமும் டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு, காப்பீடு உயர்வு, பசுமை வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கையை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் எங்களது கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ேவலைநிறுத்தத்தால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் சுமார் 26 லட்சம் லாரிகள் ஓடாது. இது சம்பந்தமாக பெங்களூருவில் வருகிற 5-ந் தேதி தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க மாநாடு நடக்கிறது. அதேபோல், வருகிற 26-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெறுகிறது.
அன்றைய தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளோம். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. எனவே, டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும். அடுத்த மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் நடைபெறும்.
எனவே, மார்ச் 5-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும். வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த கட்டாயப்படுத்தியதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரூ.1,100 கோடி ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment