தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்திய மெடிக்கல் கவுன்சில் மாநில தலைவர் டாக்டர் செந்தில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மெடிக்கல் கவுன்சில் தேசிய தலைவர் ஜெயலால், ஐ.எம்.ஏ மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மதுரை அரசு மருத்துமவனை டீன் சங்குமணி, துப்புரவு பணியாளர் முத்துமாரி உட்பட 100 மருத்துவப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி ரவீந்திரநாத் குமார், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரின் முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு, 20ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அனைவரையும் காப்பாற்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு 266 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டு, 166 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்திய மெடிக்கல் கவுன்சில் தேசிய, மாநில தலைவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி தொடர்பான அச்சம் விரைவில் சரியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.