இந்தியா முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், 2 ஆம் கட்டமாக தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும், அதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகையை பார்வையிடும் மத்திய மந்திரி ஹர்சவர்தன் இன்று மதியம் 1 மணி அளவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.