நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமலானபோது சில மாநில அரசுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் மாநில அரசுகளின் வருவாய் குறையும் என்று முறையிடப்பட்டது. எனவே ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அவ்வப்போது வழங்கி வருகிறது.
அந்த வகையில் இரண்டாவது கட்டமாக 2019-2020 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம்ப முடியாத நன்மை
இந்த இழப்பீட்டுத் தொகையானது கொரோனா பாதிப்புகள் இருக்கும் சமயத்தில் தக்க சமயத்தில் மாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ளது. கொரோனா விளைவாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது தமிழகத்திற்கு வரவேண்டிய தொகைதான் என்ற போதும்,ஒட்டு மொத்தமாக இவ்வளவு தொகையை மத்திய அரசு விடுவிப்பதாக செல்லியிருப்பது தமிழக அரசுக்கு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.