தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள்,
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. சட்டசபை தொகுதி வாரியாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் பணி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகின்றன.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்குவதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையில், தேர்தல் கமிஷனர்கள் சுசில் சந்த்ரா, ராஜிவ் குமார், பொதுச்செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் கமிஷனர் சந்திரபூஷன் குமார் மற்றும் அதிகாரிகள், இன்று காலை சென்னை வந்தனர்.
இன்று பகல், 12:15 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சட்டசபை தேர்தலை ஏப்., 4வது வாரத்தில் நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
திமுக சார்பில் கலந்து கொண்ட ஆர்எஸ்பாரதி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என தெரிவித்தார்.