தேறிவருகிறார் சசிகலா – மருத்துவமனை அறிக்கை

SHARE

சசிகலாவின் தண்டனை காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்து தான் விரைவில் விடுதலை ஆகப்போவதை கண்டு சசிகலா உற்சாகமாக இருந்தார். இதற்காக அவர் தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். அவரை சிறை நிர்வாகம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
காய்ச்சல், மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்தது. அவரது நுரையீரல் நிலை குறித்து பரிசோதனை செய்ய கடந்த 21-ந் தேதி கலாசிபாளையாவில் உள்ள விக்டோரியா மருத்துவனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சசிகலா அதே மருத்துவமனையில் தனி வார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் கொரோனா மற்றும் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமானதை அடுத்து நிமோனியா பாதிப்பும் உண்டானது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி, டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இந்த சிகிச்சைக்கு சசிகலாவின் உடல் சரியான முறையில் ஒத்துழைப்பதாக டாக்டர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்குமாறு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகத்திடம் சசிகலாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அந்த மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று அறிகுறிகள் குறைய தொடங்கியுள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறினார்.
இதனிடயே விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சசிகலா சுயநினைவோடு தான் உள்ளார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, சர்க்கரை போன்றவை சரியான அளவில் கட்டுக்குள் உள்ளன என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்..
இதற்கிடையே சசிகலா விடுதலையாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. அவர் விடுதலை ஆகும் தினத்தை அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.



SHARE

Related posts

Leave a Comment