பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்- முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

SHARE

திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விலகி சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திரிணமுல் காங்கிரஸ்., மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மம்தாவின் அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்த சுவேந்து அதிகாரி என்பவர், சில எம்எல்ஏ.,க்களுடன் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இது மம்தாவிற்கு மிகப்பெரிய இழப்பு என கூறப்பட்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் தான் போட்டியிட உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.


நந்திகிராமில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். பின்னர் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள், இங்கு பதவி சுகம் அனுபவித்தவர்கள், வேறு கட்சிக்குச் சென்றால், நான் கவலைப்படமாட்டேன். அவர்களால், இந்த கட்சி உருவாக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்த தங்களிடம் இருக்கும் பணத்தையும், சொத்துகளையும் பாதுகாக்கவே இதுபோன்று கட்சி மாறுகிறார்கள்.

நான் எப்போதுமே என்னுடைய சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை நந்திகிராமில் இருந்துதான் துவங்குவேன். இது எனக்கு அதிர்ஷ்டமான இடம். இந்த முறை, நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடலாம் என நினைக்கிறேன். இந்தத் தொகுதிக்கு எனது பெயரைப் பரிந்துரைக்குமாறு கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஸியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இது சாத்தியமாக இருந்தால், நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.


பா.ஜ.,விடம் மேற்கு வங்கத்தை விற்பதற்கு சிலர் முயல்கிறார்கள். அதை மட்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை, பா.ஜ.,வுக்கு என்னுடைய மாநிலத்தை விற்கவிட மாட்டேன். என் கட்சியை விட்டு விலகியவர்களுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன், நந்திகிராமில் தனியார் கார் தொழிற்சாலை அமைக்க மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்தான் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் ஆட்சி அமரக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment