மதுரை: குறைந்த கட்டணத்துடன் இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்களை முடக்கி வைத்துள்ளதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ரயில் சேவையை மொத்தமாக தனியாருக்கு வார்க்க பாஜ அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்சில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது பஸ், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் முதல் பஸ் போக்குவரத்து துவங்கியது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. தற்போது அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
ஆனால் ரயில் சேவை மட்டும் முழுவதுமாக, முந்தைய நிலையில் இருந்தது போல் இல்லை. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும், சிறப்பு ரயில்கள் என்ற பெயர்களில், அதே நேரத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள், முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. குறைந்த கட்டணம் என்பதால் பாசஞ்சர் ரயில்களில், மக்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்து வந்தனர். தவிர மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகாசி, ராஜபாளையம் திண்டுக்கல், திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என பெரும்பாலானோர் பாசஞ்சர் ரயில்களில் மேலும் குறைந்த மாதாந்திர கட்டணத்தில் சீசன் டிக்கெட் எடுத்து, தினமும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வந்தனர்.
மதுரை – செங்கோட்டை, மதுரை – ராமேஸ்வரம், மதுரை – திண்டுக்கல், மதுரை – திருநெல்வேலி என மதுரையில் இருந்து மட்டும் இயக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்களில் சீசன் டிக்கெட் எடுத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினசரி பயணம் செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது பல மடங்கு அதிக கட்டணம் கொடுத்து, பஸ்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு பயணிகள் ரயிலில் செல்ல ரூ.10 மட்டுமே கட்டணம். ஆனால் மதுரையில் இருந்து திருமங்கலம் செல்ல பஸ் கட்டணம் ரூ.31…! மூன்று மடங்கு அதிகம். அதிலும் பாசஞ்சர் ரயிலில் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்தால், அந்த கட்டணத்திலும் மூன்றில் ஒரு பங்கு குறையும். இதனால் நாடு முழுவதுமே பாசஞ்சர் ரயில் சேவை என்பது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
கொரோனாவை காரணம் காட்டி, பாசஞ்சர் ரயில்களை ரத்து செய்த மத்திய அரசு, மீண்டும் இந்த சேவையை துவக்கவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது என்று பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:அரசு பஸ் சேவை வழக்கம் போல் இயக்கப்படுகிறது. கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன. எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் பாசஞ்சர் ரயில்கள் மட்டும் ஏன் முடக்கப்பட்டுள்ளன. பஸ்களில், சிறப்பு ரயில்களில், பஜார்களில், தியேட்டர்களில், திருவிழாக்களில் பரவாத கொரோனா, பாசஞ்சர் ரயில்களை இயக்கினால் மட்டும் பரவி விடுமா?
ரயில் சேவையை தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காகத்தான் பாசஞ்சர் ரயில்களை முடக்கி வைத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜ அரசு. நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கக் கூடிய பாஜவின் பல திட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் சீசன் டிக்கெட் எடுத்து ரயில்களில் பயணம் செய்பவர்கள், தங்களுக்குள் ‘சங்கம்’ வைத்திருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவரும் பாஜ, அதிமுக கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தனர்.