தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது லேசான நிமோனியா காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் மையத்தில்(ஆர்ஐஎம்எஸ்) லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இயக்குனர்,கடந்த 2 நாட்களாக லாலுவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. வெள்ளிக்கிழமை நிமோனியா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அவரது வயதை கருத்தில் கொண்டு, டாக்டர்களின் அறிவுரைப்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களிடமும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் டில்லி அழைத்து செல்ல வாய்ப்பு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்..
லாலுவின் மகனும் எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி செய்தியாளர்களிடம் பேசும் போது, உடல்நிலை மோசமடைந்துள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. டாக்டர்களின் அறிக்கை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.