தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் கூட்டணி பற்றி தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
கூட்டணியில் பா.ம.க.வுடனான தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் இல்லத்தில், கே.பி.முனுசாமி, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
இதில் தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.