2021 தேர்தல் – 234 தொகுதிகளில் 4100 வேட்பாளர்கள் போட்டி

SHARE

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி 4,100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு நேற்றே சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தேர்தல் பிரசாரம் மேலும் சூடுபிடிக்க தொடங்கும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர். அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு முடிந்து தற்போது சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிவடைந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வேட்புமனுக்கள் மீது கடந்த 20ம் தேதி (வெள்ளி) பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுவில் முறையாக பூர்த்தி செய்யாத 2,738 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,509 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வேட்பு மனுக்களை 21 மற்றும் 22ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வாபஸ் பெற தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை 3 மணி வரை சுமார் 250க்கும் மேற்பட்டோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாற்று வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.  இதையடுத்து, 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை 3 மணிக்கு மேல் வெளியிட்டனர். அதன்படி 234 தொகுதிகளில் 4,100 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மேலும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு நேற்று மாலையே தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் 6 தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்று மாலையுடன், வேட்புமனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட நடைமுறைகள் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். கொரோனா அச்சத்திலும் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில், திமுக, அதிமுக, மநீம,  அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில், தலைவர்கள் தங்களது இறுதி கட்ட சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி, டிடிவி.தினகரன், கமல், ஜி.கே.வாசன், சீமான் என தலைவர்கள் தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுதவிர தேசிய தலைவர்களும் தமிழகத்தை முகாமிட திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, ராகுல், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, பாஜ தலைவர்கள் என அடுத்தடுத்து வர உள்ளதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment