சென்னையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலித்சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70. இவர்களது மகன் ஷீத்தல், 40. இவர்கள் மூவரும், அடுக்குமாடி குடியிருப்பில், வசித்தனர். தலித் சந்த்தின் மகள் பிங்கி, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தினமும் தந்தையை பார்க்க, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு, தந்தைக்கு உணவு கொண்டு வந்தார். அப்போது, வீட்டின் வெளிதாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது, தந்தை, தாய், சகோதரர் என மூவரும், இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்தனர். பின், யானைவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரின் பிரேதத்தையும் கைப்பற்றினர். இதில், மூவரின் உடல்களிலும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக, மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
உயிரிழந்த ஷீத்தல் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக ஷீத்தல் மற்றும் தற்போது பூனேவில் வசிக்கு அவரது மனைவி இடையே பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேளை மனைவியே கூலி படையை ஏவி இந்த கொலையை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.