உமாபதி கிருஷ்ணன். தலைமை செய்தி ஆசிரியர்–
மலேசியாவில் பிரதமராக இருந்த போது, 2015 காலகட்டத்தில்,நஜீப் ரசாக் ,அந்நாட்டின் அரசு நிறுவனமான எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர்.
நஜிப் மீது நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது மலேசிய அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நஜீப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி ,
3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்பளித்தார். ஆனால், இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிப்பதால் அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..
நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த குற்றசாட்டிற்கு உரிய ஆதாரம் இல்லை என்றும்,இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்