7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்- ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற பாராட்டு

SHARE

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவர் முத்துக்குமார் ஆகியோர் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உள்ஒதுக்கீடு அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை மருத்துவ மாணவர் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படாது என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அடுத்த விசாரணையின் போது அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் 3 முதல் 4 வார கால அவகாசம் கேட்டுள்ளார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் ஆளுநர் மனசாட்சிப்படி விரைந்து முடிவெடுக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உள்ஒதுக்கீடு அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அக். 29-ல் தமிழக அரசாணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் இவ்விரு மனுக்களும் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் ஒப்புதல் வழங்கியது, அரசாணை பிறப்பிக்கப்பட்ட விபரத்தை அரசு தலைமை வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.


இதையடுத்து, உள்ஒதுக்கீடு அவசர சட்டத்தின் மீது விரைவில் முடிவெடுத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த அவசர சட்டத்தால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை நினைத்து நீதிமன்றம் மகிழ்ச்சியடைகிறது. இந்த மனுக்களை தாக்கல் செய்ய மனுதாரர்களையும் நீதிமன்றம் பாராட்டுகிறது என்றனர். பின்னர், வழக்கை தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


SHARE

Related posts

Leave a Comment