நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலியை ஒலித்தபடி சாலைகளிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதால் பல்வேறு தரப்பினருக்கும் பீதி, பயம், பதற்றம் என மனதளவில் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலியை ஒலிக்க வேண்டாம் என்று மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது. மக்களிடையே பதற்றம் மற்றும் பீதியை உருவாக்குவதால் ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலியை ஒலிக்க வேண்டாம் என்று மருத்துவமனைகளுக்கு மாநில மருத்துவ இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனம் செல்ல தாமதம் ஆகும் பட்சத்தில் சைரனை பயன்படுத்தலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே நிலவி வரும் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மே 28ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அம்மாநிலத்தில் நேற்று 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பால் நேற்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 612 ஆக அதிகரித்துள்ளது.
