பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்தனர். அப்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் மார்ச் மாதம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அப்போது பரம்பீர்சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ் முக் மாதம் ரூ.100 கோடி வரை வசூலித்து தர வேண்டும் என உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே மூலம் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், இதையடுத்து முகேஷ் அம்பானியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுவிக்கவே வெடிபொருள் கார் சதி திட்டம் தீ்ட்டியதாக கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் பரம்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்த வரும் நிலையில், தலைமறைவானார்.
பரம்பீ்ர் சிங்கிற்கு மும்பை குற்றப்பிரிவு போலீஸ் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதுவரை மூன்று முறை ஜாமினில் வெளிவர முடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து பரம்பீர் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக மாஜிஸ்திரேட் கோர்ட் அறிவித்தது.