பாஷா வெளியிட்ட பரபரப்பான வீடியோ

SHARE

கடந்த, 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ல், கோவையின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்துக்காக விமான நிலையம் வந்தபோது, மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக, ‘அல் உம்மா’ இயக்க தலைவர் பாஷா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட, 167 பேர் கைது செய்யப்பட்டு, கோவை தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்தது. 2007ல், தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் பாஷா, அன்சாரி உள்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு தலா, 10 ஆண்டு, 7 ஆண்டுகள் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் மேல் முறையீடு செய்ததால், விடுதலை செய்யப்பட்டனர். பாஷா, அன்சாரி உள்பட, 14 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாஷா தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர் சமூக வலைதளங்களில், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் பாஷா பேசியது இது தான் – கோவை மத்திய சிறையில் இருந்து பரோலில் வீட்டுக்கு வந்த நான், பரோலில் வரக்கூடிய இந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். காரணம் என்னவென்றால், சென்னை மற்றும் கடலுார் இதர தென்மாவட்டங்களில், பலத்த மழையின் காரணமாக, வெள்ள சேதம் ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வை இழந்து, மிக துயரத்துக்கு ஆளானார்கள்.அதை செய்தித்தாள்கள், சிறையில் உள்ள ‘டிவி’ வாயிலாகவும் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.

அந்த வேதனையோடு ஒரு நல்ல விஷயம், அதிலே இருந்ததை கண்டு மகிழ்ந்தேன். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் தோளோடு தோள் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது மிகவும் மனதை நெகிழச் செய்தது.

குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் அதில் ஈடுபட்டிருந்தன. இந்திய தேசிய லீக், முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் மிக முனைப்புடன், எந்த ஜாதிமத வேறுபாடின்றி பணி செய்தது என் மனதுக்கு மிகவும் நிறைவை தந்தது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பாஷா வீடியோ வெளியிட்டது எப்படி என, பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.மேலும், பாஷாவின் பரோலை ரத்து செய்ய வலியுறுத்தி பாரத் சேனா, பா.ஜ., சார்பில், கோவை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனியர் குற்றவியல் வழக்கறிஞர் ஞானபாரதி: தண்டனை கைதிகளின் குடும்பத்தில் ஏற்படும் மரணம், மகன், மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு மூன்று நாள் வரையில் போலீஸ் பாதுகாப்புடன் பரோல் வழங்கப்படுகிறது. எஸ்கார்டு இல்லாமல், 30 நாட்கள் நிபந்தனை பேரில் பரோலில் விடுவிக்கப்படுகின்றனர். பரோலில் செல்லும் நபர் சிறை விதி படி செயல்பட நிபந்தனை இருந்தால் அதை மீறக்கூடாது. பரோல் விதி மீறுவோர் குறித்து புகார் அளித்தால், அதை விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரம் சிறை கண்காணிப்பாளருக்கு உள்ளது. பரோலில் வருபவர், சமூக பிரச்னை பற்றி கருத்து வெளியிடுவதில் தவறில்லை. அரசியல் பற்றியோ, அரசை எதிர்த்தோ மற்றும் மத பிரச்னை பற்றியோ பாஷா பேசவில்லை. பரோல் விதியை மீறி கருத்து தெரிவித்து இருந்தால் அது குற்றம் என்றார்.

அதே நேரம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வராஜ்:தண்டனை கைதிகள், என்ன காரணம் தெரிவித்து, பரோலில் சென்றார்களோ, அதற்காக மட்டுமே பரோலை பயன்படுத்த வேண்டும். பரோல் விதிமுறை மீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். சமூக ஊடகத்தில் கருத்து தெரிவிப்பதற்காக, பாஷாவை பரோலில் விடுவிக்கவில்லை. சுய தேவைக்கு பரோல் அனுமதி பெற்று, விதிமீறி கருத்து சொல்வது தவறானது. அவர் வெளியிட்ட கருத்தை பிடிக்காதவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம். எஸ்கார்டு போலீசார் எப்படி அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை. கட்டுப்பாடு மீறி செயல்படுவது தவறான அணுகுமுறை என்றார்.


SHARE

Related posts

Leave a Comment