மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 12வது நாளாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் நாளை நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
‘பாரத் பந்த்’துக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருவதால் அது தொடர்பான விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது..
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு சங்கங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் தாங்களாகவே முன்வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதனால் நாளை நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கூடி வருவதுடன் சமூகவலைதளங்களில் இது தொடர்பான விஷயம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் டுவிட்டரில் #BharatBandh, #IndiaSupportFarmerProtest போன்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
”விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை”, ”எந்த சந்தர்ப்பத்திலும், எல்லா இடங்களிலும் என்றும், எப்போது விவசாயிகளை நான் ஆதரிப்பேன்”, ”நமது பொருளாதாரத்தில் விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள், அவர்கள் இல்லையேல், உணவு இல்லை. விவசாயிகளை நான் ஆதரிக்கிறேன்”. ”விவசாயிகளின் போராட்டத்திற்கு மரியாதை செய்ய, பாரத் பந்த்தை நான் ஆதரவு தெரிவிக்கிறேன். விவசாயிகளுக்காக குரல் எழுப்புங்கள், ஒட்டுமொத்த நாடும் உங்களுக்காக உள்ளோம்”.
”கொரோனா பிரச்னை, வேலையிழப்பு, பொருளாதார பிரச்னை, விவசாயிகள் போராட்டம்… என நாடு தவித்து வரும் வேளையில் பா.ஜ., அரசு புதிய பார்லிமென்ட் அமைக்க ரூ.971 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை கொரோனா மருந்து ஆய்வுக்கோ, அதுதொடர்பான பயன்பாட்டிற்கோ அல்லது விவசாயிகளுக்கு உதவவோ பயன்படுத்தலாமே…” என பலரும் பல விதமான கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.