நீதிமன்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த 4 ஆயிரம் கோவிட் மரணங்கள்-பீகார் கொடுமை

SHARE

 பீஹார் மாநிலத்தில் கோவிட் தொற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்களை தணிக்கை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், தற்போது 3,929 மரணங்களை புதிதாக சேர்த்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த கோவிட் மரணங்கள் ஒரே நாளில் 71 சதவீதம் உயர்ந்துள்ளது.

பீஹாரில் நிதிஷ்குமார் அரசு புதனன்று மாநிலத்தின் மொத்த கோவிட் இறப்புகள் 9,429 என்று தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு வரை 5,500 ஆக இருந்த மொத்த கோவிட் மரணங்கள் திடீரென 9 ஆயிரத்தை தாண்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த எண்ணிக்கை மத்திய அரசின் தினசரி கோவிட் இறப்புகளின் பட்டியலையும் பாதிக்கிறது. பீஹார் அரசு கோவிட் தொற்று பாதிப்பு மற்றும் மரணங்களை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றம், கோவிட் 2-ம் அலை எழுந்த ஏப்ரல், மே மாதத்தில் இறப்புகளை தணிக்கை செய்யும்படி கூறியது. மூன்று வார தணிக்கைக்குப் பின்னர் புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 2020 முதல் 2021 வரை பீஹாரில் கோவிட் நோயால் 1,600 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் 7 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 7,775 என்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கையை சேர்த்துள்ளனர். ஆனால் 38 மாவட்டங்களில் எங்கு, எப்போது இந்த கூடுதல் மரணங்கள் நிகழ்ந்தன என்பதை குறிப்பிட்டு சொல்லவில்லை. திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அதிக இறப்புகள் மாநில தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்துள்ளது. அங்கு 2,303 பேர் இறந்துள்ளனர். இருப்பினும் அதிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பாட்னாவிலுள்ள மூன்று தகன மையங்களில் கோவிட்டால் இறந்த 3,243 உடல்களை எரியூட்டியுள்ளனர்.

இது பற்றி மாநில சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் பிரத்யாய் அம்ரித் அளித்துள்ள விளக்கத்தில், வேறு மாவட்டங்களில் இறந்தவர்களின் உடல்களும் பாட்னாவில் தகனம் செய்யப்பட்டிருக்கும். அவர்களின் இறப்புகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் பதிவாகியிருக்கும். எனவே தகன மையங்களில் பதிவாகும் எண்ணிக்கை வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment