நவம்பர் 29ல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்தாண்டு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை அரசு கொண்டுவந்த நிலையில், இவற்றை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர்.
விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்தவாரம் அறிவித்தார்.
இந்த முடிவுக்கு அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது இந்த நிலையில், இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பூர்வமாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என விவசாய சங்கங்கள் மற்றும் போராட்ட குழு தெரிவித்துள்ளன. மேலும், விவசாயிகளின் கோரிக்கையான அடிப்படை ஆதார விலையை உறுதிப் படும் சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.