கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் பொருளாதார செயல்பாடுகளை முடக்கிப்போட்ட நிலையிலும், சீனா தனது ஏற்றுமதியில் கடந்த 20 ஆண்டுகளில் புதிய உச்சம் கண்டுள்ளது.
ஜனவரி – பிப்ரவரி காலக்கட்டத்தில் சீனாவின் ஏற்றுமதியானது 60.6% வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் 17% வீழ்ச்சியை சந்தித்தது. பல்வேறு நிறுவனங்கள் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சியை 40% வரை கணித்திருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் பொய்யாக்கி 60% வரை வளர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் புதிய உச்சம் என அந்நாட்டு சுங்கத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இறக்குமதியும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 4 சதவீதமாக இருந்தது. இம்முறை 22 சதவீதமாகியுள்ளது.
மக்கள் வீட்டிலிருந்தே வேலைப் பார்ப்பது அதிகரித்ததாலும், தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் உபகரணங்களின் தேவை அதிகரித்தாலும் சீனாவின் மின்னணு மற்றும் ஜவுளி துறை ஏற்றுமதி மிகவும் அதிகரித்துள்ளது. மின்னணு ஏற்றுமதி 54.1% அதிகரித்துள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி 50.2% உயர்ந்தது. தொற்றுநோயால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தித் தொழில்கள் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டதும் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு காரணம்.
சீனப் புத்தாண்டு அந்நாட்டில் முக்கியமான திருவிழாவாகும். இதற்காக ஒரு வாரத்திற்கு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தி கூடங்கள் விடுமுறை விடுவார்கள். அந்த சமயத்தில் பணியாளர்கள் சொந்த ஊர் சென்று சந்திர புத்தாண்டை கொண்டாடுவார்கள். இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பணியாளர்களிடம் பயணங்களை தவிர்க்கும் படி அரசு கேட்டுக்கொண்டது. இதனால் ஏற்றுமதி சார்ந்த மாகாணங்களில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றது.
சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தக உபரி 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுங்கத் துறை கூறியுள்ளது. இதே சமயம் கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டதால் அந்த ஆண்டு வர்த்தக உபரி 5,130 கோடி டாலராக இருந்தது. தற்போது அது இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியில் ஏற்றம் கண்டிருந்தாலும் அமெரிக்காவுடனான உறவு, மீண்டும் கொரோனா அச்சம் போன்றவற்றால் எச்சரிக்கையாகவே உள்ளது. இந்த ஆண்டு ஜி.டி.பி., வளர்ச்சிக்கு 6 சதவீதத்துக்கு மேல் இலக்கு நிர்ணயித்துள்ளது.