மாத வருமானம் 66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

SHARE

சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,நூற்றாண்டு காலமாக நாம் போற்றி பாதுகாத்து வந்த சமூகநீதிக்கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது என தெரிவித்தார்

.சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலை புகுத்த நினைத்தது மத்திய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019-ம் ஆண்டு செய்தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளார்கள். முரணானது சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுதான் பா.ஜ.க. அரசினுடைய திட்டம். எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு முரணானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அவர் பேசினார்.

ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கும் குறைவானவர்கள் வருமான வரிக்கட்ட தேவையில்லை என்று சொல்லும் பா.ஜ.க. அரசு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்பது எப்படி?, கிராமமாக இருந்தால் தினமும் 27 ரூபாயும், நகரமாக இருந்தால் தினமும் 33 ரூபாயும், இதற்கு கீழ் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக சொல்கிறது மத்திய அரசு. இந்த மக்களுக்கு எத்தகைய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்கலாம், யாரும் தடுக்கவில்லை. அதே அரசு, தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது என்றால், இதனைவிட கேலிக்கூத்து ஒன்று இருக்க முடியாது என்றார்.

5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 1,000 சதுர அடி நிலத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளாம். இந்த இடத்தில் நாம் கவலைப்படும் ‘வர்க்கம்’ என்பதும் அடிபட்டு விடுகிறது. என்னை பொறுத்தவரையில், முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அல்ல இது. முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடாகத்தான் இதனை சொல்ல வேண்டும்

இந்த வகையில், இந்திய அரசியலமைப்பின் 103-வது திருத்தம் என்பது சமூகநீதிக்கு எதிரானது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கும் எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது என்பதால் நாம் எதிர்க்க வேண்டியதாக உள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் சமூக நீதி தத்துவமே உருக்குலைந்து போகும். பொருளாதார நிலை என்பதையே அனைத்துக்கும் கொண்டு வந்துவிடுவார்கள். கடமை இருக்கிறது சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்தது. மிகக்கடுமையாக எதிர் வாதங்களை வைத்தது. பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வேறாக இருந்தாலும், முழு அமர்வும் இத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாக வேண்டும். அந்த கடமை தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் இருக்கிறது என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


SHARE

Related posts

Leave a Comment