பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு ெசய்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்படவும் இல்லை. இது ஒழுங்குபடுத்தவும் இல்லை.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று பொதுமக்களுக்கு ஆசை காட்டப்படுகிறது. சினிமா நடிகர்களை கொண்டு விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.
கிரிப்டோகரன்சி குறித்து கடந்த வாரம் பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கிரிப்ேடாகரன்சி, இளைஞர்களை சீரழிக்கக்கூடியது என்பதால், தவறானவர்கள் ைகக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் விவாதித்தது. அதில், கிரிப்டோகரன்சி மீது ஒரேயடியாக தடை விதிக்காமல், அதை ஒழுங்குபடுத்தலாம் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பணம் சம்பாதித்தால், வரி கட்ட வேண்டும். கிரிப்டோகரன்சி மூலம் கிடைத்த வருவாய்க்கு சிலர் ஏற்கனவே மூலதன ஆதாய வரி செலுத்தி வருகின்றனர். எனவே, இந்த வருவாய்க்கு மூலதன ஆதாய வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது.
இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதெல்லாம் பட்ஜெட் சம்பந்தப்பட்ட வேலை. பட்ஜெட் தேதி நெருங்கி வருகிறது. எனவே, பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து தரகு கட்டணம் வாங்கினால், அத்தகைய நபர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பொருந்தும். அவர்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். இதுபற்றிய ஜி.எஸ்.டி. சட்டம் தெளிவாக உள்ளது. அவர்கள் ஜி.எஸ்.டி.யில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.