தீபாவளி-சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற 10 லட்சம் பேர்

SHARE

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் ரெயில், பஸ்கள் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி, தொழில், படிப்பு நிமித்தமாக வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பண்டிகையை கொண்டாட செல்லும் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி நிம்மதியாக பயணம் செய்வதற்கு வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உண்டு.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக அன்றாடம் வெளியூர்களுக்கு இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி (நேற்று) வரையில் 3 ஆயிரத்து 506 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

6 இடங்களில் இருந்து கிளம்பிய பஸ்கள்

அனைத்து பஸ்களும் ஒரே இடத்தில் இருந்து இயக்கப்பட்டால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ்நிலையம், கே.கே.நகர் மாநகர பஸ்நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இன்னும் இணைக்கப்படவில்லை என்பதால், முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முன்கூட்டியே நிரம்பின. காத்திருப்போர் பட்டியலும் நீண்டது. ‘தட்கல்’ டிக்கெட்டுகளும் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

எனவே சென்னையில் இருந்து இயக்கப்பட்ட கன்னியாகுமரி, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, பாண்டியன் உள்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்தன.

பயணிகள் அதிகளவில் இருந்ததால் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டன.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போக்குவரத்து போலீசார் பரிதவித்தனர்.

10 லட்சம் பேர் பயணம்?

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் 25 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ரெயில்கள் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும், ஆம்னி பஸ்கள் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணித்திருந்தனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை கிடைத்ததால் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



SHARE

Related posts

Leave a Comment