கேரள மாநிலம் கொச்சியில் வசிப்பவர் சலீம் குமார், 38. கிராம உதவியாளர். கடந்த 2013ல் மணல் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டுவதற்காக கிராம உதவியாளரான குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தனர். அப்போது அவர் மது அருந்திய நிலையில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணியில் இருந்தபோது மது அருந்தியதாக குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘என் பணி நேரம் முடிந்த பின் மாலையில் ஸ்டேஷனுக்கு அழைத்தனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபி தாமஸ் அளித்த தீர்ப்பு: ஒருவர் மீது மது வாசனை வீசுகிறது என்பதாலேயே அவர் மது குடித்துள்ளார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யலாமல் ஒதுக்குப்புறமான தனி இடத்தில் மது குடிப்பதும் தவறல்ல. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.