umapathy krishnan
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச்செல்லும் கோடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்கு பிறகு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான சயான் ஜாமீனில் வெளியே இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது, முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளைபோன சில முக்கிய ஆவணங்களை அளித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் நேற்று பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்த நிலையில், நேற்று சட்டசபை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இந்த விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டதால், அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின்னர், பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். கோடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க சதி செய்கிறார்கள்’’ என்று தி.மு.க. அரசை குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினர். அவர்களுடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கவர்னரிடம் மனு அளித்தனர். மேலும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டினர்.
இருந்த போதும் இந்த கொலைசம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ப்புகள் இருப்பதாக வரும் தகவல்களால் இந்த வழக்கு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.