எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் -பிரதமர் மோடியுடன் சந்திப்பு

SHARE

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பகல் 11.55 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் அவர் செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள். மதியம் 2.45 மணிக்கு விமானம் டெல்லியை சென்றடைகிறது.

பின்னர் அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார்.
இரவு 7.30 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.


இந்த சூழ்நிலையில் அமித்ஷாவுடனான சந்திப்பு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, டெல்லியில் நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, அவரிடம் தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்கிறார். நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோருகிறார்.
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்ததை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்து, கொரோனா ஒழிப்பில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, வருவாய் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மீள மத்திய அரசாங்கம் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார்.
இதுதவிர, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இணைப்பு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமருக்கு அழைப்புவிடுக்கிறார்.
இதுமட்டுமில்லாமல், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக கரூர் – புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் கால்வாய் தோண்டும் திட்டத்தை தொடங்கிவைக்கவும், கல்லணை – கீழ்பவானி விரிவாக்க திட்டங்களை தொடங்கிவைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தையும், ராமநாதபுரம், தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டத்தையும் தொடங்கிவைக்க அழைப்பு விடுக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவர் பிரதமரை சந்திக்க இருக்கிறார் என்ற நிலையில், அதிகாரிகள் இல்லாமல் பிரதமரை தனியாக சந்திக்கவும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் திரும்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை 5.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை வருகிறார்.


SHARE

Related posts

Leave a Comment