கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கனடா விலக்கிக் கொண்டது. நாளை(செப்.,27) முதல் நேரடியாக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கோவிட் 2வது அலை காரணமாக, இந்தியாவில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க கடந்த ஏப்ரல் மாதம் கனடா தடை விதித்தது. இந்த தடை பல முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கனடா போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 27 முதல் இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் விமானங்கள் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. கனடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்னர் டில்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் எடுக்கப்பட்ட கோவிட் மாலிகுலர் சோதனை சான்றிதழை பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த முடிவை வரவேற்று கனடாவிற்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ,இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை இதுவாகும். ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள், இனிமேல் தினசரி டில்லி – டொரான்டோ மற்றும் வான்கூவர் இடையே விமானங்களை இயக்க முடியும். பயண கட்டுப்பாடுகளை இன்னும் எளிதாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கனடாவிற்கு நேரடியாக இல்லாமல் வேறு மார்க்கமாக செல்பவர்கள், 3வது நாட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னர் அங்கு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.