தென் ஆப்பிரிக்காவில் காந்தி கொள்ளுப்பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை!

SHARE

மோசடி வழக்கில், காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். தன்னை ‘சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசியல் நலன்களை மையமாகக் கொண்ட ஒரு ஆர்வலர்’ எனக் கூறிக் கொள்வது வழக்கம். இவருக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டில் மோசடி வழக்கு ஒன்று தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. தேசிய வழக்கறிஞர் ஆணையத்தின் (என்.பி.ஏ.,) பிரிகேடியர் ஹங்வானி முலாட்ஸி எதிர் தரப்பில் ஆஜராகி வாதிட்டார்


நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் நிறுவன இயக்குனரான தொழிலதிபர் மகாராஜை 2015ல் ராம்கோபின் சந்தித்துள்ளார். மகாராஜின் நிறுவனம் ஆடை, கைத்தறி மற்றும் பாதணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. மகாராஜின் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு ‘லாபத்தில் பங்கு’ அடிப்படையில் நிதியையும் வழங்குகிறது. இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தனக்கு சரக்குகள் வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை உள்ளே எடுக்க வேண்டுமானால் அவசரமாக பணம் தேவை என்றும் ராம்கோபின் மகாராஜை அணுகியுள்ளார்.


இதற்காக மகாராஜிடம் 6 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் கேட்டுள்ளார் ராம்கோபின். அதற்காக, இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் காண்பித்துள்ளார். இந்த ஆவணங்களை காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால் மகாராஜும் நம்பியுள்ளார். இதையடுத்து மகாராஜ் தரப்பில் ராம்கோபினுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு குற்றவியல் வழக்கு தொடர்ந்தார் மகாராஜ்.

வழக்கு ஆரம்பித்தபோது, லதா ராம்கோபின் 50,000 ரேண்ட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக, பொய் தகவல் கூறி, போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை ராம்கோபின் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நிறவெறியால் சிறைக்கு சென்ற காந்தி….மோசடியால் சிறைக்கு சென்ற பேத்தி

தென் ஆப்பிரிக்காவில் காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்போது 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு செல்வதற்காக, முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தார் காந்தி. அந்த பெட்டியில் வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி, காந்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளினர். அதன்பின் பிரிட்டிஷாரின் இனவெறியை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை தென் ஆப்பிரிக்காவிலும், பிறகு இந்தியாவிலும் காந்தி தீவிரமாக நடத்தினார். ஆனால் அதே டர்பன் நகரில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மோசடி வழக்கில் சிறைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment