அமைச்சர் தங்கமணியின் தொகுதிக்கு நிதி ஒதுக்கியது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக நிதி ஒதுக்காமல், மக்களுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என அறிவுறை வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த மனுவுக்கு நாளை விளக்கமளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்டு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், ‘ஊரக வளர்ச்சிக்கான, ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மக்களுக்காக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக நிதி ஒதுக்கக்கூடாது,’ என கருத்து தெரிவித்தனர்.